பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (09.10.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, மத்திய அரசு ஊழியர்கள்/ ஓய்வூதியதாரர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் 12% என்ற அளவிலிருந்து கூடுதலாக 5% அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15,909.35 கோடியும், 2019-20 நிதியாண்டில் ரூ.10,606.20 கோடியும் செலவாகும். இந்த அகவிலைப்படி / அகவிலை நிவாரண உயர்வு மூலம் சுமார் 49.93 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
அகவிலைப்படி உயர்வு காரணமாக ஆண்டுதோறும் ரூ.8590.20 கோடியும், நடப்பு 2019-20 நிதியாண்டில் (ஜூலை 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 8 மாதங்களுக்கு) ரூ.5726.80 கோடியும் கூடுதல் செலவாகும்.
அகவிலைப்படி நிவாரணம் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.7319.15 கோடியும், நடப்பு நிதியாண்டில் ரூ.4870 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கைச் செலவை ஈடுகட்டவும், அடிப்படை ஊதியம் / ஓய்வூதியம் கரையாமலும் பாதுகாக்கும் வகையில் அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் 1 ஜனவரி மற்றும் 1 ஜூலை என ஆண்டுதோறும் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது.